search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபரிநீர் வெளியேற்றம்"

    அணைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக பெருஞ்சாணி அணையில் இருந்து 4226 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. #Perunchanidam
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்து வரும் கன மழையினால் மாவட்டம் முழுவதும் குளு, குளு சீசன் நிலவுகிறது.

    கன்னிமார், புத்தன் அணை, பூதப்பாண்டி பகுதிகளில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. கன்னிமாரில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவானது. நாகர்கோவிலில் இன்று காலையில் 5 மணி முதல் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது.

    குலசேகரம், திருவட்டார், கீரிப்பாறை, தடிக்காரன் கோணம், குளச்சல், மார்த்தாண்டம் பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் கொட்டித் தீர்த்து வரும் கன மழையினால் அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2½ அடி உயர்ந்து உள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளதையடுத்து அணையை பொதுப்பணித் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலையில் பெருஞ்சாணி அணையில் இருந்து 4226 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதையடுத்து வள்ளியாறு, கோதையாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    குழித்துறை ஆற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. பழையாற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் கரையோர பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சிறுவர் பூங்காவை தாண்டி தண்ணீர் விழுவதால் அருவியில் குளிப்பதற்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 24.20 அடியாக உள்ளது. அணைக்கு 2947 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 712 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 76.20 அடியாக உள்ளது. அணைக்கு 2818 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 4226 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    சானல்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    தொடர் மழையின் காரணமாக குலசேகரம், தடிக்காரன் கோணம், கீரிப்பாறை பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழை வெள்ளம் தேங்கி உள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக் கப்பட்டுள்ளது.

    தோவாளை, ஆரல்வாய் மொழி பகுதியில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளதால் தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-57.2, பெருஞ்சாணி-68.8, சிற்றாறு 1-40.4, சிற்றாறு 2-39, மாம் பழத்துறையாறு-33, நிலப்பாறை-12, இரணியல்-5.2, ஆனைக்கிடங்கு-23.2, குளச்சல்-9, குருந்தன் கோடு-2.4, அடையா மடை-57, கோழிப் போர்விளை-33, முள்ளங்கினாவிளை-14, புத்தன் அணை-70.2, திற்பரப்பு-42.4, நாகர் கோவில்-27, பூதப்பாண்டி- 60.2, சுருளோடு-58.4, கன்னிமார்-90, ஆரல்வாய் மொழி-29, பாலமோர்-72.4, கொட்டாரம்-12.6, மயி லாடி-27.6.  #Perunchanidam


    ×